Feeds:
Posts
Comments

Archive for April 7th, 2008

mannar மன்னார் உப்புக்குளம் வடக்கு பகுதியில் அடையாளம் காணப்படாத நிலையில் ஆணின் சடலம் ஒன்று இன்று (07/04/2008) காலை  கண்டெடுக்கப்பட்டுள்ளது.

மன்னார் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட உப்புக்குளம் வடக்கு பகுதிக்கு மன்னார் மனித உரிமைகள் ஆணைக்குழு அலுவலகத்தின் அருகாமையில் செல்லும் வீதியை அண்மித்த பகுதியில் இச்சடலம் கண்டெடுக்கப்பட்டிருக்கின்றது.

இதுவரை அடையாளம் காணப்படாத இச் சடலத்தின் தலையின் மேற் பகுதியில் துப்பாக்கிச் சூட்டுக் காயம் காணப்படுகின்றது. குடிமனைகள், கடைகளை அண்டிய பகுதியில் காணப்பட்ட இச் சடலம் தொடர்பாக பொலிஸார் அப்பகுதியில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு அப்பிரதேசத்தில் கடும் தேடுதல் நடவடிக்கைகளையும் இராணுவத்தினரோடு இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.

இதே வேளை சடலம் காணப்பட்ட இடத்திற்கு இன்று காலை 10.15 மணியளவில் விஜயம் செய்த மன்னார் மாவட்ட நீதவான் T.J.பிரபாகரன் சடலத்தை பார்வையிட்டு மரண விசாரணைகளை மேற்கொண்டுள்ளார். இதன்போது சடலம் கிடந்த பகுதியை மிக அண்டிய பிரதேச வாசிகளின் கருத்துக்களையும் கேட்டு அறிந்து கொண்டார். மரண விசாரணையின்போது சடலத்தை அண்மித்து காணப்பட்ட கறுத்த நிற துணிகளையும் பொலிஸார் நீதவானிடம் காண்பித்துள்ளனர். விசாரணையின் முடிவில் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு ஒப்படைத்து அடையாளம் காண்பதற்கு இலகுவாக தயார் நிலையில் வைக்குமாறு பொலிஸாருக்கு பணித்துள்ளார்.   

மரண விசாரணைகள் இடம்பெற்றபோது மன்னார் உதவிப் பொலிஸ் அத்தியேட்சகர்  T.D.L.R.அசன், மன்னார் பொலிஸ் நிலைய குற்றத்தடுப்புப்பிரிவு பொலிஸ் அதிகாரி மற்றும் பிரதேச வாசிகள் என பலர் பிரசன்னமாகி இருந்தனர்.

இவ்வருடம் தை மாதம் 27ஆம் திகதி இரவு ஆயுததாரிகளால் அழைத்துச் செல்லப்பட்ட நபரொருவர் மறு நாள் காலை இதனை அண்டிய பகுதியில் சடலமாக மீட்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Read Full Post »